இலங்கை விடுவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் சென்னை வந்தனர்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த ஜூன் 28ம் தேதி மற்றும் 30ம் தேதி இரண்டு விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இலங்கை கடலோர காவல் படையினர், ரோந்து கப்பலில் வந்து தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, மீனவர்களை கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுபோல, கடந்த ஜூலை 27ம் தேதி, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 9 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்னர்.
இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இலங்கை மதிப்பில் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. அதில் 7 மீனவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி செலுத்தினர். இதையடுத்து அந்த மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதோடு இலங்கை நீதிமன்றம் படிப்படியாக மேலும் 13 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவித்தது, இதையடுத்து, தமிழக மீனவர்கள் 20 பேரும், நேற்று காலை கொழும்புவில் இருந்து, சென்னைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். 20 பேரையும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.