இலங்கைக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ பீடி இலை பறிமுதல்: கடலில் குதித்து தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை
மண்டபம்: பனைக்குளம் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 1230 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடலில் குதித்து தப்பியோடியவர்களை விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் அருகே, ஆற்றங்கரை தோப்புவலசை வடக்கு கடற்கரைப் பகுதியில், நாட்டுப்படகில் பீடி இலைகளை மறைத்து வைத்து இன்று காலை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றனர். ஆனால், நாட்டுப்படகு கடலில் கரை தட்டி நின்றது. அப்போது அந்த வழியாக ஆற்றங்கரை கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றனர்.
அவர்கள் சந்தேகத்தின் பேரில் நாட்டுப்படகை நோக்கி சென்றபோது, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பினர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நாட்டுப்படகை சோதனை செய்தனர். அப்போது 30 கிலோ வீதம் 41 பண்டல்களில் 1230 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. பீடி இலைகள் மற்றும் நாட்டுப்படகை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை மண்டபம் மரைன் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக கடலில் குதித்து தப்பியோடியவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காவல்துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு பின், நாட்டுப்படகுடன் பீடி இலைகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.