இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.பல லட்சம் மதிப்புள்ள 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது
மண்டபம்: உச்சிப்புளி அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.பல லட்சம் மதிப்புள்ள 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தலைத்தோப்பு கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தலைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் சிலர் டிராக்டரில் இருந்து பார்சல்களை இறக்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் டிராக்டரை நோக்கிச் சென்றனர்.
போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள், பார்சல்களை விட்டுவிட்டு டிராக்டரை விரைவாக ஓட்டிச் சென்றனர். போலீசார் பார்சல்களை கைப்பற்றி, அவைகளை பிரித்துப் பார்த்தனர். அதில் 80 கிலோ வீதம் 10 பார்சல்களில் 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இவைகளின் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் தீபக்ராஜா (26), ரவி மகன் உதயகண்ணன் (19), உச்சிப்புளி அருகே இரட்டையூரணியைச் சேர்ந்த செல்வம் மகன் காளீஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாத்திரைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து மாத்திரை பார்சல்கள் மற்றும் கைதான மூவரையும் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து போலீசார் மேலும், விசாரித்து வருகின்றனர்.