இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னையை பேசி தீர்க்கலாம்: இலங்கை அமைச்சர் பேட்டி
நெல்லை: உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடம் சார்பில் தமிழ் சங்க தலைவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று பாளையில் நடக்கிறது. இதில் பங்கேற்க நேற்று நெல்லைக்கு வந்த இலங்கை பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நெருக்கடிக்கு பின்னர் இப்போது இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இலங்கையில் சுற்றுலாத்துறை மேம்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை சுமார் 12 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கை அரசு வரவேற்க தயாராக உள்ளது. இந்தியா-இலங்கை அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது. இரு நாட்டு அரசும் மீனவர் பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும்.
சகோதரர்களுக்குள் இருக்கும் பிரச்னையே மீனவர்களிடம் இருக்கும் பிரச்னை. இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் இப்பிரச்னையை எளிதில் பேசி தீர்க்கலாம். இலங்கை பொருளாதாரம் மேம்பட இந்தியா பெரும் உதவியை செய்து வருகிறது. இலங்கை அகதிகளுக்கு இந்திய, தமிழக அரசுகள் பெரும் உதவிகள் செய்து வருகிறது. சர்வதேச அளவில் முதல்முறையாக சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் அய்யப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு அறிவித்து, பல்வேறு மானியங்களை அளித்து வருகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பலனடைவர். ஹஜ் மற்றும் ஜெருசேலம் யாத்திரை செல்வோருக்கும் நாங்கள் உதவிகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.