இலங்கையில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் பரபரப்பு: பழுதடைந்த விமானம் பத்திரமாக 153 பேருடன் சென்னை வந்தது
சென்னை: சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 164 பேர் இருந்தனர். நேற்று அதிகாலை 1.55 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தில் தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் இறங்கி பின், விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பரிசோதித்தனர். அப்போது விமானத்தில் பறவை ஒன்று மோதி என்ஜின் பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்தது.விமானம். இலங்கையில் தரையிறங்கும் போது தான் பறவை மோதியுள்ளது என்று தெரியவந்தது.
விமான நிலைய பொறியாளர்கள் குழுவினர், முழுமையாக ஆய்வு செய்தபோது, விமானத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றனர். இதையடுத்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் கொழும்பிலிருந்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு 147 பயணிகளுடன் புறப்பட்டு, அதிகாலை 4.34 மணிக்கு சென்னையில் வந்து பத்திரமாக தரையிறங்கியது. ஏர் இந்தியா பொறியாளர்கள் மற்றும் சென்னை விமான நிலைய பராமரிப்பு பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பரிசோதித்தினர். அதில் முன்பகுதியில் உள்ள பேன் பிளேடு ஒன்று சேதமடைந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்து என்று கருதிய பொறியாளர்கள் விமானத்தின் செயல்பாடை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். அதன்படி அந்த ஏர் இந்தியா விமானம், விமானங்கள் பழுது பார்க்கும் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னையில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட்டு சென்று இலங்கையில் தரையிறங்கும் போது பறவை மோதி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்பு பழுதடைந்த அதே விமானத்தில் 147 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும், இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது. அதிர்ஷ்டவசமக விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.