இலங்கையில் நியூஸிலாந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது
கொழும்பு: இலங்கையில் தனியாக ஆட்டோவில் பயணம் செய்த நியூசிலாந்துப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், வீடியோ ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கைக்குத் தனியாக வந்து ஆட்டோவில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் நான்காவது நாளில், ஸ்கூட்டரில் வந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
அந்த இளைஞர், அப்பெண்ணிடம் பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததுடன், அவர் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 23 வயதான அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது வீடியோவில், ‘எனக்கு முன்னால் ஸ்கூட்டரில் வந்த ஒரு நபர், தொடர்ந்து வண்டியின் வேகத்தைக் குறைத்தார். நான் அவரை முந்திச் சென்றால், மீண்டும் அவர் என்னை முந்திச் சென்றார். பின்னர் நான் ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியபோது, அவர் என்னிடம் பேச்சு கொடுத்தார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகினாலும், அடுத்தடுத்து அவர் கேட்ட கேள்விகள் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தின.
அந்தக் கேள்வியை அவர் கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் மறுத்த பிறகும், என்னிடம் இப்படி அசிங்கமாக நடந்துகொண்டார். அவருக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது? தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்ணாக இருப்பதற்கு நான் கொடுக்கும் விலைதான் இது. இதுதான் கசப்பான யதார்த்தம். ஆனால் இந்த ஒரு சம்பவம் இலங்கையை வரையறுத்துவிடாது. நான் சந்தித்த உள்ளூர் மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்தனர்’ என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்