தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: மண்டபம் மீனவர்களுக்கும் மிரட்டல்
அவர்கள் கப்பலின் மேலே பொருத்தப்பட்டிருந்த போஃகஸ் மின்விளக்கை ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை நோக்கி பாய்ச்சி அச்சுறுத்தினர். இதனால் பயந்து போன மீனவர்கள் அந்தப் பகுதியில் இருந்து நகர தொடங்கினர். இருப்பினும், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அச்சுறுத்தி, இங்கு மீன் பிடிக்கக் கூடாது எனக் கூறி அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விரட்டியடித்தனர். இலங்கை கடற்படை தொடர் அச்சுறுத்தலால் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி பணியை கைவிட்டு நேற்று முன்தினம் இரவே கரை திரும்பி விட்டன.
அதேநேரத்தில் இலங்கை கடற்படை ரோந்து இல்லாத பகுதியில் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பிய மீனவர்களின் படகுகளிலும் மீன்பாடு குறைவாக இருந்தது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதேபோல, மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் அச்சுறுத்தி விரட்டியடித்ததால், அவர்களும் மிகக் குறைந்த மீன்களுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மீனவர்களை கைது செய்வது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிப்பது, படகுகளை சிறைபிடிப்பது போன்ற அட்டூழியங்களை செய்து வருவதால் மீன்பிடிக்க முடியாமல் மண்டபம் பகுதி மீனவர்கள் பரிதவித்து வருகின்றனர்.