இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!!
சென்னை: இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 47 இந்திய மீனவர்கள் நேற்றும் இன்றும் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலில் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பணயம் வைத்து உழைக்கும் தமிழக மீனவர்கள் மீது இவ்வாறான தொடர்ச்சியான தாக்குதல்கள், இந்தியாவின் இறையாண்மைக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரானதாகும். தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளிலேயே மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், இலங்கை கடற்படை “கடல் எல்லை மீறல்” என்ற பெயரில் அடிக்கடி அவர்களைக் கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்து வருகிறது.
இதன் விளைவாக மீனவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்திலும் நெருக்கடிகளிலும் ஆழ்கின்றன.
ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசின் மீது கடுமையான தூதரக அழுத்தம் செலுத்த வேண்டும். மீனவர் கைது சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு மட்டத்தில் அவசர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமும் சட்ட உதவியும் வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் கடலோர மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமையாகும். மீனவர்களைத் தண்டனைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இலங்கை கடற்படையின் கொடுமையை நிறுத்த இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.