வல்லவன்கோட்டை காட்டில் சுற்றித்திரியும் புள்ளிமான்கள்: பாதுகாப்பு இல்லாததால் பொதுமக்கள் அச்சம்
நெல்லை: நெல்லை அருகே வல்லவன்கோட்டை பகுதியில் அதிகளவில் சுற்றித் திரியும் மான்கள், பாதுகாப்பின்றி அலைவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் வனத்துறையின் மான் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவில் 400க்கும் மேற்பட்ட புள்ளிமான்களும், மிளாக்களும் காணப்படுகின்றன. அங்கு போதிய குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் புள்ளிமான்கள் தண்ணீருக்காக வேலியை தாண்டி அங்கிருந்து வெளியேறுகின்றன. அவை நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் அடிபட்டு பலியாவதும், தண்ணீருக்காக குளங்களை தேடிச் செல்லும்போது வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
கங்கைகொண்டான் மான் பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள், தற்போது நெல்லை பல்கலைக்கழக வளாக பகுதிகளிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் அதிகம் தென்படுகின்றன. குறிப்பாக வல்லவன் கோட்டை பகுதியில் உள்ள புதர்காடுகளில் கூட்டம், கூட்டமாக திரியும் புள்ளிமான்கள், அடிக்கடி வயல்களுக்குள் இறங்கி பயிர்களை சிதைக்கின்றன. தண்ணீருக்காக அப்பகுதியில் சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீரை தேடி அலைகின்றன. மனிதர்கள் வருவதை கண்டால், கூட்டமாக மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிகின்றன. கங்கைகொண்டான் மான் பூங்காவை செம்மைப்படுத்தி, அனைத்து மான்களையும் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.