விளையாட்டு வீராங்கனைகள் 8 பேருக்கு அரசு பணி ஆணை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
சென்னை: விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை 104 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலமாக 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலைய துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, துறை செயலாளர்கள் அதுல்ய மிஸ்ரா, சாய் குமார், அதுல் ஆனந்த், சந்தரமோகன், ஆணையர் பி.என்.தர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் சுப்பையன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.