2036ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் உதவி: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
புதுடெல்லி: வரும் 2036 ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும் இதற்காக விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 உதவி வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 21வது உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகள்-2025- ல் பங்கேற்கும் இந்திய அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘ 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இப்போதே இந்தியா தயாராகி வருகிறது. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜமானது. வெற்றிக்கான இலக்கை நிர்ணயிப்பது, வெற்றிக்காக திட்டமிடுவது அனைவரின் இயல்பாக இருக்க வேண்டும்.
வெற்றி என்பது பழக்கமாக இருக்க வேண்டும். வெற்றி பெறும் பழக்கத்தை வளர்த்துக் கொள்பவர்கள் எப்போதும் விதிவிலக்காகச் செயல்படுவார்கள். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2036ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு இப்போதே வீரர்களை தயார் செய்து வருகிறோம். சுமார் 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதத்திற்கு ரூ.50,000 உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான விரிவான முறையான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.