ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்
* நாளை மறுதினம் ஆசிய கோப்பை ஹாக்கி
ராஜ்கிர்: ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நாளை மறுதினம் பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் பைனல் உட்பட 24 ஆட்டங்களையும் ரசிகர்கள் இலவசமாக பார்த்து மகிழலாம் என்று பீகார் ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது. இலவச டிக்கெட்களை ஹாக்கி இந்தியா செயலி மூலமாக அல்லது www.ticketgenie.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க தென் கொரியா அணி நேற்று இந்தியா வந்து சேர்ந்துள்ளது.
* மேட்ச் பிக்சிங் செய்த மின்ஹசுல் அபேதின்
டாக்கா: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானதால், கிரிக்கெட் வீரர் மின்ஹசுல் அபேதின் சபீருக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு, கிரிக்கெட் வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
* நியூசி வீரர்கள் காயத்தால் அவதி
நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அக்.1, 3, 4 தேதிகளில் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. அந்த அணியில் நியூசியின் முக்கிய வீரர்கள் வில்லியம் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ஃபின் ஆலன் ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். மேலும், கேப்டன் மிட்செல் சான்ட்னரும் உடல் தகுதி பிரச்சனையில் அவதிப்பட்டு வருகிறார்.