ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்
* நியுசி - ஜிம்பாப்வே இன்று 2வது டெஸ்ட்
புலவாயோ: ஜிம்பாப்வே-நியுசிலாந்து இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட், புலவாயோ நகரில் இன்று தொடங்குகிறது. காயம் காரணமாக நியூசிலாந்து பந்து வீச்சாளர் வில்லியம் பீட்டர் ரூர்கே விலகியுள்ளார். ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட்டில் 3வது நாளே நியுசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் தொடரில் நியுசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* ஆசிய கோப்பை டி20க்கு ஆப்கான் அணி அறிவிப்பு
காபூல்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி செப்.9 முதல் செப் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க, ரஷீத்கான் தலைமையிலான 22 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் முதற்கட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) நிர்வாகி மீர் முபாரிஸ் கூறுகையில், ‘ஆசிய கோப்பை மற்றும் முத்தரப்பு தொடருக்கு இந்த 22 பேர் கொண்ட அணி செல்லும். இந்த 22 பேர் கொண்ட அணியில் இருந்து தான் அடுத்து ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கான அணியும் தேர்வு செய்யப்படும்’ என்றார்.
* வாஷிங்டன் சுந்தருக்கு இம்பாக்ட் பிளேயர் விருது
புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான, இம்பாக்ட் பிளேயர் விருது, இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வழங்கினார். இங்கிலாந்துடனான தொடரில், சுந்தர், 284 ரன்கள் விளாசியதோடு, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.