மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
*கலெக்டர் துவக்கி வைத்தார்
தேனி : தமிழ்நாடு அரசின் சார்பில், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊன்றுகோல், மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தேனி மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கியது.
இப்போட்டிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார். இதில், ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வீல்சேர் ஓட்ட போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பார்வைத்திறன் குறைபாடுடையவர், செவித்திறன் குறைபாடுடையவர், கை கால் பாதிக்கப்பட்டவர், மனவளர்ச்சி குன்றியவர்கள் என 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மேலும், இப்போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.