சிறப்பு புகார் பெட்டிகள் மூலம் நில எடுப்பு தொடர்பு இல்லாத 850 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது!
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 4(1) அறிவிக்கை கொடுக்கப்பட்ட மற்றும் உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு, நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அலோசனையின்படி முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு புகார் பெட்டிகள் 16 இடங்களில் அமைக்கப்பட்டு அதன் மூலம் நில எடுப்பு தொடர்பு இல்லாத 898 மனுக்களில் 850 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு 48 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
நில எடுப்பு தொடர்பான 4488 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை பரிசீலித்து முடிவு எடுக்க அரசாணை எண்.136, நாள் 10.10.2023 வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் ஆணை மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை, 4 (1) அறிவிக்கை வெளியிடப்பட்டு 6ன் கீழான வரைவு விளம்பல் வெளியிடப்படாத இனங்கள், பிரிவு 6 இன் கீழான வரைவு விளம்பல் வெளியிடப்பட்டு தீர்வானம் பகரப்படாத இனங்கள், தீர்வானம் பிறப்பிக்கப்பட்டு வாரியம் வசம் ஒப்படைப்பு செய்யப்படாத நிலங்கள், சுவாதீனம் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படாத இனங்கள், திட்டம் செயல்படுத்தப்பட்ட இனங்கள் என்ற 5 இனங்களாக வகைப்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக முதல் 2 வகைபாடுகளில் உட்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்ட 169 புகார் பெட்டி மனுக்கள் உட்பட 4396 ஏக்கர் நிலங்கள் பொது மக்களின் கோரிக்கைகளுக்கேற்ப விலக்களிக்க சிறப்புக் குழு அரசிற்கு பரிந்துரை செய்தது.
அதனடிப்படையில், அரசு இந்நிலங்களை விலக்களித்து முறையே கடந்த 04.10.2024, 23.12.2024, 27.03.2025 மற்றும் 13.08.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்குட்பட்ட தீர்வானம் பகரப்படாத மீதமுள்ள 2 புகார் பெட்டி மனுக்கள் உட்பட 860 ஏக்கர் நிலங்கள் விலக்களிக்க பரிசீலினையில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தீர்வானம் பகரப்பட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திட்டம் செயல்படுத்தப்படாத இனங்களில் பெறப்பட்ட புகார் பெட்டி மனுக்கள் 3920 உட்பட சுமார் 5700 ஏக்கர் நிலங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து, அரசாணை (நிலை) எண்.10, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நி.எ.2.2) துறை, நாள் 23.01.2025 இன் மூலம் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.