மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்; முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு: மும்முனைப் போட்டி உறுதி
* தவெக தலைமையில் கூட்டணியை ஏற்படுத்த தலைவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக கட்சி தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் தவெக தலைவருக்கேவழங்கி சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சி தலைமை வழங்கிய சிறப்பு அழைப்பு கடிதம் மற்றும் பொறுப்பாளர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்த பின்னரே, பொதுக்குழு கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு முன் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர் வைக்க காவல்துறை அனுமதி தரவில்லை. எனினும், பல இடங்களில் அனுமதியின்றி தவெகவின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அகற்றும்படி போலீசார் அறிவுறுத்தினர். எனினும், பேனர்களை தவெகவினர் அகற்றாததால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக பேனர்கள் அகற்றப்பட்டன. ஓட்டலின் 3வது கேட்டில், அவருக்கென்று ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வழியாக, இன்று காலை 10 மணியளவில் தவெக தலைவர் விஜய் பொதுக்குழு கூட்ட அரங்குக்குள் நுழைந்தார். நடிகர் விஜய் வருவதற்கு முன்னதாகவே பவுன்சர்கள் வந்தனர். அதைத் தொடர்ந்து, கூட்டம் தொடங்கியது.
சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத லட்சிய நோக்கச் செயல்வடிவத்தின் முதல்படியாக தமிழக வெற்றி கழகத் தலைவர் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினார். கடந்த செப்.,27ம்தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் திட்டமிட்டு கற்பனைக்கும் எட்டாத வகையில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் இன்னபிற செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தபட்டனவோ என்று எண்ணத்தக்க வகையில் அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதில் நமது குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர். மக்கள் அரசியலை மையமாக கொண்ட நம் லட்சியப் பயணத்தில் பங்கெடுத்து கொள்ள வந்து உயிர் நீத்த நம் சொந்தங்களான அந்த தியாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. அதோடு, அவர்களுக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளையும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது. இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகச் செயலை ஒன்றிய பாஜ அரசு, ஓர வஞ்சனையுடன் கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட நம் மீனவச் சகோதரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை ஒன்றிய பாஜ அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே இருக்கிறது. சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில், பீகாரில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதே அதற்குச் சான்று. பீகாரில் நடந்த அந்தப் பெயர் நீக்கம் குறித்த காரணங்களே இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் ஒரு தீர்வு எட்டப்படாமல், தற்போது நிலவும் குழப்பங்களுக்கு ஒரு முடிவு எட்டப்படாமல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையிலும் முறையில்லை. மேலும், தமிழகத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் ஒரு மாத காலமே அவகாசம் கொடுத்துள்ளது.
6 கோடி வாக்காளர்களுக்கும் மேல் இருக்கும் தமிழ்நாட்டில் அத்தனைப் பெயர்களையும் சரிபார்க்க ஒரு மாத காலம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? அவசர கதியில் நடைபெறும் இப்பணிகளால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பாதிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நியாயமான, எந்தவித அரசியல் குறுக்கீடுமற்ற, சுதந்திரமான தேர்தல் நடைபெற, சிறப்புத் தீவிரத் திருத்தம் எனும் இந்தக் குழப்பமான நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் பழைய நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும். டெல்டா விவசாயிகள் பாடுபட்டு விளையவைத்த நெல்லில் சுமார் 20 லட்சம் டன் நெல் வீணாகி உள்ளன. வீணான நெல் மூட்டைகளுக்கும், மழையில் மூழ்கி அழுகிப்போன சம்பா நெற்பயிர்களுக்கும் உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். மழை, வெள்ளத்திலிருந்து சென்னை மக்களைத் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். மழை நீர் வடிகால் வசதிகள் இல்லாத பகுதிகளில் வெள்ளம் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தவெக தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்துள்ள முதலீடுகள், அவற்றின் தற்போதைய நிலை, இவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்துத் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக கட்சி தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் தவெக தலைவருக்கேவழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது. தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகர், கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்டோர் இந்த தீர்மானங்களை முன்மொழிந்தனர், வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விஜய் தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் மும்முனைப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.