சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 1.40 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்து துறை தகவல்
* வழக்கம் போல் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
சென்னை: சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 1.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதிநாட்களையொட்டி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை உணர்ந்து பயணிகள் செல்ல சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும், மாதவரம் பேருந்து முனையம் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் என சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் சென்னையில் இருந்து 1.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையின் சார்பில், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம், நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும், 610 சிறப்பு பேருந்துகள் என 2,702 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,40,504 பயணிகள் பயணம் செய்தனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை : அரசு சார்பில் பயணிகளின் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள், ரயிலில் செல்ல தக்கலில் பதிவு செய்தவர்கள் டிக்கெட் கிடைக்காமல் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளின் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் செல்ல பல கட்டணத்தை உயர்த்தியதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர். குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் படுக்கை வசதிகொண்ட ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக ஆயிரத்து 1,500 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சி செல்லும் ஆம்னி பேருந்துகளில் 2,300 ரூபாய் வரையிலும், நெல்லைக்கு 3,800 ரூபாய் வரையிலும், நாகர்கோவிலுக்கு 3,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.