சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகும் பீகார் துணை முதல்வரிடம் 2 வாக்காளர் அட்டை உள்ளது: 3 லட்சம் பேரின் முகவரி ‘0’; தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன்படி கணக்கெடுப்பு பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதாக கூறிய நிலையில் அவர் 2 வாக்காளர் அட்டை வைத்திருந்ததாகவும், அதில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படாத அடையாள அட்டை எப்படி வந்தது என விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகும், பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. லக்கிசராய் சட்டமன்றத் தொகுதியில் IAF3939337 என்ற எண்ணில் ஒரு அடையாள அட்டையும், பாட்னா மாவட்டத்தில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் AFS0853341 என்ற எண்ணில் மற்றொரு அடையாள அட்டையும் உள்ளது.
இரண்டு இடத்திலும் அவர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளாரா? இதற்கு தேர்தல் ஆணையம், சின்ஹா இருவரில் யார் பொறுப்பேற்க வேண்டும்? சின்ஹா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? உங்கள் சட்ட திட்டங்கள் எல்லாம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் தானா? மேலும், 3 லட்சம் வீடுகளின் எண் வெறும் 0 என உள்ளது. இது நகைச்சுவையாக உள்ளது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
* சின்ஹா விளக்கம்
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, ‘‘பங்கிபூர் தொகுதியில் இருந்து எனது பெயரை நீக்கி, லக்கிசராய் தொகுதியில் எனது பெயரை சேர்க்க ஏப்ரல் 2024ல் விண்ணப்பித்திருந்தேன். அதற்கான படிவத்தை நிரப்பி கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஏதோ காரணத்தால், பங்கிபூரில் இருந்து எனது பெயர் நீக்கப்படவில்லை. அது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது. இது குறித்து பூத் அதிகாரியை அழைத்து எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளேன். என்னிடம் 2 ஆவணங்களும் உள்ளன’’ என்றார்.