மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்விக்க சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை: வரும் டிசம்பர் 3, 2025 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளையும் மற்றும் அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளை உற்சாகபடுத்தும் விதமாக 25.11.2025 அன்று விமான பயணம், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் திரைப்படங்களை பார்த்த அனுபவங்களை பெற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் உடனாளர்களுடன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலர் சோ.மதுமதி மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எம்.லஷ்மி, இணை இயக்குநர் .பி.ஃபெர்மி வித்யா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் இம்மாணவ மாணவியர்களுடன் பூந்தமல்லியிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியை சார்ந்த மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிலும் கை கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் அவர்களின் உடனாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மொத்தம் 232 நபர்கள் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து AG DMS மெட்ரோ ரயில் நிலையம் வரை ரயில் பயணத்தை மேற்கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் மெட்ரோ ரயில் பயணத்தினை மேற்கொண்டனர்.
பின்னர் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் திரைப்படத்தை (சிறப்பு இலவச காட்சி) கண்டு களித்தனர். மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்பயணம், மற்றும் மெட்ரோ ரயில் பயணம் மற்றும் திரையரங்கில் திரைப்படம் பார்த்த அனுபவம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள், உற்சாகமடைந்து தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களுடன் தங்களின் இல்லங்களுக்கு திரும்பி சென்றனர்.