கரடி ஊருக்குள் புகுவதை தடுக்க காரையாறு கோயிலில் கரடி மாடசாமிக்கு சிறப்பு வழிபாடு
*பக்தர்கள் திரளாக பங்கேற்பு
விகேபுரம் : நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சாஸ்தாவின் முதல் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் சுவாமி சொரிமுத்து அய்யனார் மற்றும் பூரண, புஷ்கலை தேவிகளுடன் அருள்பாலிக்கிறார்.
மேலும், மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசிமாட சாமி, கரடி மாடசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலைமாடன், பட்டவராயன் சுவாமி மற்றும் ஆற்றங்கரையில் உள்ள சங்கிலி பூதத்தார், மொட்டையன் சாமி, பாதாள கண்டி உள்ளிட்ட சுவாமிகளும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் முக்கிய விழாவாக ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. ஆற்றங்கரை அருகேயுள்ள சங்கிலி பூதத்தாருக்கு நெல் அறுவடை சிறப்பாக இருக்க நெற்கதிர் சாத்தி சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதே போன்று, கடைசி வெள்ளி மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் புரட்டாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் சங்கிலி பூதத்தார் மற்றும் மொட்டையன்சாமிக்கு 1000 வடைமாலை சாத்தி படைப்பு பூஜை நடந்தது. நண்பகல் முதல் தொடங்கிய இந்த பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் விரதம் இருந்த பக்தர்கள் சங்கிலியால் அடித்து கொண்டு சங்கிலி பூதத்தாரிடம் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும் அங்கு அமைந்துள்ள கரடி மாடசாமிக்கு பரிகார வேண்டுதல் பூஜை நடந்தது. கரடி மாடசாமிக்கு சந்தனத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
கடந்த சில நாட்களாக பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருவது அதிகரித்து வருகிறது. அவை விகேபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கரடிகள் வெளியேறியுள்ளது. பகல் நேரங்களில் புதர்களில பதுங்கியிருக்கும் இந்த கரடிகள் இரவு நேரங்களில் உணவுத் தேடி ஊரை சுற்றி வருகிறது.
அவை கோயில், வீடு, கடைகளில் புகுந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது மட்டுமின்றி, எதுவும் கிடைக்கவில்லை என்றால் அந்த ஆத்திரத்தில் பொருட்களை சேதப்படுத்தி விட்டு செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து ஊருக்குள் கரடி வருவதை தடுக்க சொரிமுத்து அய்யனார் கோயிலில் கரடி மாடசாமியை சாந்தப்படுத்தும் விதமாக நேற்றுமுன்தினம் அப்பகுதி மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கடந்த காலங்களில் மழை பெய்வதற்காகவும், யானைகள், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதுண்டு. மலைப்பகுதியில் வசிக்கும் காணி மக்கள் இதனை செய்து வந்தனர்.
ஆனால் சமீபகாலமாக இது போன்ற பூஜைகள் செய்வதில்லை. இதனால் மழை குறைவாக பெய்வதாகவும், திடீரென அதிகமாக மழை பொழிவதாகவும், வனவிலங்குகள் திடீரென ஊருக்குள் புகுவதும் அதிகரித்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.