ராமேஸ்வரம் ஆன்மீக ஸ்தலத்தை சுற்றிப் பார்க்க சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்க வேண்டும்
*சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் அனைத்து ஆன்மீக சுற்றுலா இடங்களையும் சுற்றிப் பார்க்க சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் என்றாலே ஆன்மிகம் கலந்த சுற்றுலாவாகத்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் ராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை வந்து சென்ற நிலை மாறி தற்போது ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் மக்கள் பார்த்து செல்கின்றனர்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ராமர்பாதம், கோதண்டராமர் கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமர் தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், கலாம் தேசிய நினைவகம், குந்துகால் உள்ளிட்ட பல இடங்களையும் நாள் முழுக்க சுற்றிப் பார்க்கின்றனர்.
இந்த இடங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளில் இருப்பதால் குடும்பமாக வருபவர்கள் தங்களது பொருளாதார நிலைக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே பார்க்கின்றனர். சொந்த மற்றும் வாடகை கார், வேன்களில் வருபவர்கள் அனைத்து இடங்களையும் பார்த்து விடுகின்றனர்.
மற்றவர்கள் இங்குள்ள ஆட்டோ, வேன்களில் மட்டுமே செல்ல முடியும். வாடகை வாகனங்களுக்கு ஓட்டுனர்கள் கேட்கின்ற கட்டணத்தை கொடுக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் போதிய அளவில் நகர் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதுவும் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் பேருந்து வரும் நேரம் வரை காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையால் வேறு வழியின்றி வாடகை ஆட்டோ, வேன்களில் செல்லும் நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க ராமேஸ்வரம் ரயில் நிலையம், நகராட்சி பேருந்து நிலையம், அக்னி தீர்த்த கடற்கரை, ராமநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கிமீ துரத்திற்குள் இருக்கும் இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு ஆட்டோவிற்கு அளவுக்கு அதிகமான கட்டணம் கொடுக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது.
அதுவும் வெளியூர் சுற்றுலா பயணிகள், வெளிமாநில யாத்திரிகர்கள் என்றால் இன்னும் கூடும். நகருக்குள் குறைவான ஆட்டோ கட்டணம் என்பது ரூ.50 மற்றும் 75 தான். அதுவும் ஒரு சில ஆட்டோக்களில் தான். மேலும் உள்ளூர் வாசிகள் என்றால் அதிக தொகை கிடைக்காது. கூட்டமான இடங்களில் உள்ளூர் மக்களை பார்த்து விட்டால் பார்க்காதது போல் ஓட்டுனர்கள் செல்வதும், கேட்குற வாடகையை தரமாட்டீர்கள் என கூறி உள்ளூர் மக்களை புறக்கணிப்பது இங்கு வாடிக்கையாக உள்ளது.
மேலும் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் நலன் கருதி ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயம் செய்யவும், குறிப்பிட்ட இடங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ராமநாதசுவாமி கோயிலை மையப்படுத்தி பத்ரகாளியம்மன், நம்புநாயகி அம்மன், கோதண்டராமர் கோயில், ஏகாந்தராமர் கோயில், கெந்தமாதன பர்வதத்தில் அமைந்துள்ள ‘ராமர்பாதம்’ உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்துள்ளது.
இதுபோல் அக்னி தீர்த்த கடற்கரை, ராமர், லெட்சுமணர், சீதா தீர்த்தங்கள், தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை, பாம்பன் குந்துகால் சுவாமி விவேகானந்தர் மண்டபம், பாம்பன் பாலம் மற்றும் பேக்கரும்பிலுள்ள கலாம் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் செல்கின்றனர். இந்த இடங்களுக்கு செல்ல அடிக்கடி போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
இந்த இடங்களுக்கு செல்ல தேவையான அளவுக்கு மினி பேருந்துகள் இயக்குவதுடன், இந்த இடங்களை ஒருங்கிணைத்து சிறப்பு சுற்றுலா மினி பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முன் வரவேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்
ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மிகம் சார்ந்த கோயில், அக்னி தீர்த்தம் கடற்கரை உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களை ஒன்றிணைத்து சுற்றுலா பேருந்துகளை இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்தக் கடற்கரை, ராமர், லெட்சுமணர், சீதா தீர்த்தங்கள், கெந்தமாதன பர்வதம், கலாம் இல்லம், பேக்கரும்பு கலாம் நினைவிடம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுற்றுலா பேருந்துகளும் தயாரானது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் காரைக்கோடி மண்டலம் சார்பில் இந்த சுற்றுலா பேருந்து இயக்கப்பட இருந்தது. இதற்காக 5 புதிய பேருந்துகள் ஸ்டிக்கர் ஒட்டி ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்திருந்தது.
ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 12 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து புறப்படும் வகையில் திட்டமிடபட்டிருந்தது. இந்த இடங்களுக்கு செல்ல நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ.80 நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு முறை ரூ.80 செலுத்தி டிக்கெட் எடுத்துவிட்டால் அன்று இரவு 8 மணிவரை அந்த டிக்கெட்டை பயன்படுத்தி இந்த பேருந்துகளில் எந்த இடத்திலும் ஏறி எந்த இடத்திலும் இறங்கிக் கொள்ளும் வகையில் சுற்றுலா பேருந்து இயக்க தயராக இருந்தது. இது குறித்த செய்திகள் வெளியாகி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விதிகளை மீறும் வாகனங்கள்
ராமேஸ்வரத்தில் முறையான பெர்மிட்டுடன், வெளியூர் பெர்மிட் மற்றும் பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆண்டு தோறும் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், மக்களிடம் பெறப்படும் கட்டணமும் அதிகரித்து வருகிறது.
மேலும் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி விதிகளை மறந்து கட்டுப்பாடின்றி விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போக்குவரத்துத் துறை, காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது உரிய நடவடிக்கை எடுத்தாலும் நடவடிக்கையை தொடர முடியாத நிலைக்கு ஆளாகுகின்றனர்.