சிறப்பு டெட் தேர்வு எழுத நாளை முதல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை: சிறப்பு டெட் தேர்வு எழுத நாளை முதல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. டெட் தகுதிப் பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் 2 ஆண்டுகளில் தகுதி பெற வேண்டும் எனவும், ஓய்வு பெற 5 ஆண்டு மட்டும் உள்ளவர்களுக்கு தளர்வும் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது பெற விரும்பாதவர்கள் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு 3 முறை பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு உதவும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு டெட் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பம் நவம்பர் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆசிரியர்கள் இணையதளம் வாயிலாக டிசம்பர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 01.செப்டம்பர் 2025 தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதலாம். முழு நேர, பகுதி நேரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளவர்களும் இத்தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், ஜனவரி மாதம் தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.