கிட்னி மோசடி குறித்து விசாரிக்க தென்மண்டல ஐஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஏன் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை’’ என்றனர். அரசு தரப்பில், ‘‘இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்னி ேமாசடி தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஐபிஎஸ் அதிகாரி தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது தொடர்பாக டிஜிபியிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்’’ எனக் கூறி பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். பின்னர் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அரசு தரப்பில், ‘‘விதிப்படி சுகாதார பணிகளின் இயக்குனர் மட்டுமே விசாரித்து புகார் அளிக்க வேண்டும்\” என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளுடன், புதிய பிஎன்எஸ் சட்ட விதியின் அடிப்படையிலும் வழக்கு பதியலாமே’’ என்றனர்.
அரசு தரப்பில், ‘‘நீதிமன்ற உத்தரவின்படியே இந்த முறை பின்பற்றப்படுகிறது. நீதிமன்ற உத்தரவால் அரசின் கை கட்டப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்குழுவை அமைப்பதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. சிபிசிஐடி ஏடிஜிபியே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார்’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், விசாரணைக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்கும்படி கூறி சிறிது நேரம் ஒத்திவைத்தனர். பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு விசாரணைக்குழு உறுப்பினர்களின் பட்டியல் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘கிட்னி விற்பனை விவகாரம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் மட்டுமின்றி, பிஎன்எஸ் விதிகளின் படியும் தவறானது. இருப்பினும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக புகார் எழுந்துள்ள நிலையில் உண்மையை அறிய முறையான விசாரணை அவசியமாகிறது. ஊரக சுகாதார பணிகளின் இயக்குனர் புகார் அளித்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய இயலும் என அரசு தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
துரதிர்ஷ்டவசமாக மாநில அரசு வழக்குப்பதிவு செய்ய தேவையில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. அரசு அமைத்த விசாரணை குழுவே குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதை பதிவு செய்துள்ளது. எனவே, தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன் மற்றும் மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோரை கொண்ட குழுவை இந்த நீதிமன்றமே அமைக்கிறது. நாமக்கல் கிட்னி விற்பனை குறித்து வழக்குப்பதிந்து, விசாரித்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை செப். 24க்கு தள்ளி வைத்தனர்.