தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது: எல்.முருகன் அறிக்கை
சென்னை: தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது என்று எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்பில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தென் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காத தொழில்வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா அமைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள், எளிமையான சரக்கு போக்குவரத்து வசதிக்கென தேசிய நெடுஞ்சாலைகள், சரக்கு போக்குவரத்துக்காக ரயில் திட்டங்கள் என தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாடு தொன்றுதொட்டு உற்பத்தி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் தொடங்கி தொழில் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கை, உலக அளவில் நமது நாட்டின் மீது ஏற்பட்டு வரும் நன்மதிப்பு, ஒன்றிய அரசின் திட்டங்கள், தமிழகத்தின் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற காரணங்களால் தொழில்துறையில் தமிழகம் சாதித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளன என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.