முன்பதிவு குறைவாக இருப்பதால் 6 சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தீபாவளி முடிந்து பணிபுரியும் நகரங்களுக்குத் திரும்ப வசதியாக, தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது. மேலும், தமிழக அரசு தீபாவளி மறுநாளான அக்டோபர் 21ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், தீபாவளிக்குப் பிறகு இயக்கப்படவிருந்த 6 சிறப்பு ரயில்கள், முன்பதிவு குறைவாக உள்ளதால் 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
அதன்படி இன்று மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு கோட்டயம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் (06121), நாளை மதியம் 2.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்கள் (06122) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு அறிவிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு- நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06153) மற்றும் அதிகாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் (06154) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவிலில் இருந்து வரும் 28ம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் (06054), வரும் 29ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் வரை செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் (06053) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு குறைவாக இருப்பதால் இன்று முதல் வரும் 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.