தென்கிழக்கு வங்கக்கடலில்முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் : 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும்.
மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடையக் கூடும். மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழைக்கு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல், நாகை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 22ம் மற்றும் 23ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.