தெ.ஆ.வுடன் முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அபார வெற்றி; 4ம் நாளில் முடிவுரை
லாகூர்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்று, பாகிஸ்தான் அணி, 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பாக். - தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 378 ரன்களும், தென் ஆப்ரிக்கா 269 ரன்களும் எடுத்தன. அதன் பின், பாகிஸ்தான் அணி 267 ரன்களை 2ம் இன்னிங்சில் எடுத்தது. அதனால், 277 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, 3ம் நாள் ஆட்டத்தின் கடைசியில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தென் ஆப்ரிக்கா வீரர்கள் ரிக்கெல்டன், டி ஸோர்ஸி துவக்கினர். சிறிது நேரத்தில் ஸோர்ஸி 16 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து பின் வந்த வீரர்களில், டெவால்ட் புரூவிஸ் (54 ரன்) தவிர மற்ற வீரர்கள் மோசமாக ஆடி சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அதனால், 60.5 ஓவரில் தென் ஆப்ரிக்கா 183 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், பாகிஸ்தான், 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாக். தரப்பில் நோமன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி தலா 4, சாஜித் கான் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த அணிகள் இடையிலான 2வது போட்டி வரும் 20ம் தேதி துவங்குகிறது.