தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார் இந்திய கேப்டன் சுப்மன் கில்!
கொல்கத்தா: கழுத்து வலி காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய கேப்டன் சுப்மன் கில் விலகினார். கழுத்து வலியால் நேற்றைய நாள் ஆட்டத்தின்போது RETIRED HURT ஆகி வெளியேறிய இந்திய கேப்டன் சுப்மன் கில், கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று (இரண்டாம் நாள் ஆட்டம்) இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின்போது, சுப்மன் கில் ஸ்வீப் ஷாட் விளையாடிய பின்னர், தனது கழுத்து பகுதியில் சுளுக்கு ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டார். உடனடியாக களத்தை விட்டு வெளியேறிய அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயம் அதிகரித்த காரணத்தால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் மருத்துவக் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
தொடரில் இருந்து விலக வாய்ப்பு? முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முழு டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்மன் கில்லின் திடீர் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.