நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுக்கும் மழை; சோத்துப்பாறை அணை நீர்மட்டம் கிடுகிடு: ஒரே நாளில் 10 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதனால், பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணை பெரியகுளம் நகருக்கான குடிநீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார பாசன நிலங்களுக்கான நீர் ஆதாரமாகவும் உள்ளது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் போது அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தததையடுத்து சோத்துப்பாறை அணை நிரம்பியது. அதன்பின் போதிய மழை இல்லாததால் படிப்படியாக நீர்மட்டம் 66 அடிக்கு குறைந்தது.
இந்த நிலையில் ஜூன் மாதத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 100 அடி வரை உயர்ந்தது. ஆனால் அதன் பின்னர் நீர்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக 67 அடிக்கு குறைந்தது. கடந்த ஒரு மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால் மீண்டும் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 76 அடியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று பகல் மற்றும் இரவு நேரத்தில் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 86.42 அடியை எட்டியது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 112 கனஅடி. அணையில் இருந்து பெரியகுளம் நகராட்சி பகுதி மக்களின் குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.