காசிரங்கா பூங்காவின் முதல் பெண் இயக்குனர் சாதித்த சோனாலி கோஷ்!
ஒரு பெண்ணின் கனவு எத்தனை தடைகள் வந்தாலும் சிதையாது. தடைகளை தாண்டி வெற்றி காண்பது பெண்களின் வலிமையின் அடையாளம். இந்திய வன சேவையின் வரலாற்றில் அப்படிப்பட்ட வலிமையையும், தன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கும் பெயர்தான் டாக்டர் சோனாலி கோஷ் (IFS). இந்திய வன அதிகாரி 2000 - 2003 பேட்ச் (Indian Forest Service 2000-2003 Batch) அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்கா, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகம். நூற்றாண்டுக்கும் மேலான காலம் ஆண்கள் மட்டுமே தலைமையேற்ற இந்த பூங்காவின் வரலாற்றை முறியடித்து, 2023 செப்டம்பர் மாதம் முதல் புல இயக்குநராகப் பொறுப்பேற்றார் சோனாலி. இது அவருடைய தனிப்பட்ட வெற்றியைத் தாண்டி, வன சேவையில் பெண்களின் முன்னேற்றத்துக்கும், சமூகத்தில் பாலின சமத்துவத்திற்கும் புதிய அத்தியாயமாக அமைந்தது.
சோனாலியின் குழந்தைப் பருவம் ராணுவக் குடும்பத்தில் கழிந்தது. கட்டுப்பாடும் தைரியமும் அவருக்கு இயல்பாகவே பழகியவை. இயற்கை மற்றும் விலங்குகளின் மீது கொண்ட ஆர்வம், அவரை வன சேவைக்குத் தள்ளியது. 2000-2003 தேர்வில் அவர் இந்திய வன சேவையில் தேர்ச்சி பெற்று, தனது கனவுப் பயணத்தைத் தொடங்கினார். கல்வியை அங்கே நிறுத்தாமல், வனவியல், உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற துறைகளில் மேற்படிப்புகளைப் பெற்றார். “இந்தோ-பூடான் மனாஸ்” பகுதியில் புலிகள் வாழ்விடம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். “எனது எம்.எஸ்.சி காலத்தில் வனவியல் நிர்வகத்தில் (Wildlife Institute of India) பெற்ற கடினமான புலப் பயிற்சிகளும் கல்வியும் என்னை முற்றிலும் மாற்றின, குறிப்பாக வன விலங்குகள் மீதான ஆர்வம் என்னுடைய முதுகலைப் படிப்பின் போதுதான் அதிகரித்தது’ என்கிறார் சோனாலி.
அவரது பணிவாழ்க்கை சவால்களால் நிரம்பியது. தொலைந்த வனப்பகுதிகளில் தொலைபேசி, மின்சாரம் போன்ற வசதிகளே இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல்கள் இருந்தன. இருந்தாலும் சோனாலி பின்னடையவில்லை. வன காவலர்களுடன் சேர்ந்து, விலங்கு கடத்தலையும் வேட்டையாடுதலையும் தடுக்க சோர்வில்லாமல் உழைத்தார். குறிப்பாக மனாஸ் தேசிய பூங்காவை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. அந்த முயற்சிகள், அவர் வனவியல் துறையில் வல்லுநராக மட்டுமல்ல, சமூகங்களுடனும், உள்ளூர் மக்களுடனும் நெருக்கமாகச் செயல்படும் தலைவராகவும் இருக்கிறார் என்பதைக் காட்டின.அவரது சாதனைகள் கல்வியிலும் வெளிப்பட்டன. Cultural Landscapes of Asia மற்றும் Wild Treasures - Reflections on Natural Heritage in Asia போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார். இயற்கையை பாதுகாக்கும் பணிகளுக்கு சமூக பங்கேற்பு அவசியம் என்ற எண்ணத்துடன், அவர் பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இவ்வளவு கல்வி, அனுபவம் இருந்தபோதும், ஒருமுறை அவரை நிதி (Taxation) துறைக்குத் மாற்றினர். “அந்த காலத்தில் நான் வழிதவறி விட்டது போல உணர்ந்தேன். இது எனக்கான இடமல்ல என்கிற எண்ணம் அதிகமாக இருந்தது. வேலையில் ஈடுபாடு இல்லை. ஆனாலும் அந்த இடத்தில் நிர்வாகம் குறித்தும், ஆட்சிப் பணி குறித்தும் அனுபவம் கிடைத்தது” காசிரங்காவில் அவர் ஏற்றுள்ள பொறுப்பு மிகப்பெரியது. உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகக் கூட்டம் வாழும் இந்த பூங்காவை பாதுகாக்கும் பணி சவால்கள் நிறைந்தது. விலங்கு கடத்தலைத் தடுக்க புதிய கண்காணிப்பு முறைகள், பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு பயிற்சிகள், உள்ளூர் மக்களை இணைத்து பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குதல்-இவை அனைத்தையும் அவர் முன்னெடுத்து வருகிறார்.
சமூக வனபாதுகாப்பு பிரிவில் கோகராஜார் பகுதியில் பணிபுரிந்தபோது, பொன்னங்குரங்கு (Golden Langur) காப்பாற்றும் பணி அவருக்குக் கிடைத்தது. 1994 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சக்கரசிலா வனக்காப்பகத்தில், பழங்குடியினர் நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் காரணமாகவே அந்த விலங்குகள் உயிர்வாழ்ந்தன. ஆனால் நகரமயமாக்கல், பாரம்பரிய அறிவு குறைவு, நெடுஞ்சாலை கட்டுமானங்கள் போன்ற அபிவிருத்தித்திட்டங்களும் இவற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கான பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்கூட்டங்கள், முகாம்கள் நடத்தி படித்த பழங்குடி இளைஞர்களை திரட்டி பாதுகாப்புகளை
அதிகரித்தார் சொனாலி.
சோனாலி கோஷின் கதை, பெண்கள் எந்தத் துறையிலும் தங்களது இடத்தைப் பிடிக்கமுடியும் என்பதற்கான சான்று. “இது பெண்களுக்கு கடினம்” என்று சமூகம் சொன்னாலும், தன்னம்பிக்கை இருந்தால் எந்தப் பதவியையும் அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கு அவர் வாழ்ந்து காட்டும் முன்னுதாரணம். “உங்களிடம் கனவு இருந்தால் அதை கைவிடாதீர்கள். தடைகள் வந்தாலும் அஞ்சாதீர்கள். உழைப்பு, அறிவு, தன்னம்பிக்கை - இந்த மூன்றும் இருந்தால் உங்களால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் வெற்றி பெற்றால், உங்களைப் பின்பற்ற பல பெண்களுக்கு அது பாதையாக மாறும்,’’ என தன்னம்பிக்கையுடன் சொல்லும் சோனாலி கோஷ் இன்று காசிரங்கா பூங்காவின் இயக்கு நராகாவும், அங்கே உள்ள அரிய உயிரினங்களுக்கு காவலாளியாக இருக்கிறார். ஆண்களே ஆண்டு வந்த ஒரு பதவியை தனது கடின உழைப்பால் தனதாக்கியிருக்கிறார் சோனாலி.
- எஸ்.விஜயலட்சுமி.