குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடி திருவிழா; சோனை கருப்பசாமிக்கு 2,000 மதுபாட்டில் படையல் : ஆடு, சேவல் பலியிட்டு கமகமக்கும் கறிவிருந்து
சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறு கோயிலுக்கு அடுத்த பிரசித்தி பெற்றதாக திகழும் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத சனிவார திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அறங்காவலர் குழுவினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால், திருவிழா நடைபெறாமல் பூஜைகள் மட்டும் செய்து வழிபட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆடி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோயில் வளாகத்தில் பரிவார தெய்வமாக இருக்கும் சோனை கருப்பசாமிக்கு ஆடி படையல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இரவில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் 2000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கருப்பசாமிக்கு படையலாக வைத்து வழிபாடு செய்தனர். பூசாரிகள் நள்ளிரவில் வாயில் துணியை கட்டி குதிரைக்கு அருகில் உள்ள துளையில், ஒவ்வொரு பாட்டிலாக ஊற்றி படையலை நிறைவேற்றினர். ெதாடர்ந்து நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கமகம கறிவிருந்து நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.