சிலர் கட்சி தொடங்கிய உடனே இமாலய சாதனை செய்தது போல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி பதிலடி
காஞ்சிபுரம்: அதிமுக குறித்த விஜய் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதிமுக தற்போது யார் கையில் உள்ளது என விஜய் அறியாமையில் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று மதுரையில் நடைபெற்ற 2ஆவது தவெக மாநில மாநாட்டில் அதிமுக கட்சியை கடுமையாக விமர்சித்தார். மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும் போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.., நாம் உலக மகா ஊழல் கட்சியா என்ன?.., மக்கள் சக்தியே நம்முடன் அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்கு.
நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும். ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்து கொண்டு, மறுபக்கம் மதசார்பற்ற கூட்டணி என ஏமாற்றிக் கொண்டு இருப்பதுபோல் நம்ம கூட்டணி இருக்காது.
எம்ஜிஆர் யார் தெரியும்ல. அவரது மாஸ்னா என்னதுன்னு தெரியும்ல அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல கனவு கூட காண முடியல எப்படியாவது முதலமைச்சர் பதவியை தன்னிடம் கொடுங்கள். எம்.ஜி.ஆர். வந்த உடன் அவரிடம் கொடுக்கிறேன் என தன்னுடைய எதிரியையும் கெஞ்ச வைத்தவர்.
ஆனா இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்?. அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?. அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு போடனும், எப்படி பட்ட ஆட்சி அமையனும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜக என்ன வேசம் போட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் அவர்கள் வித்தை வேலைக்கு ஆகாது என்று கூறினார்.
விஜய் பேசியதற்கு அதிமுக தற்போது யார் கையில் உள்ளது என விஜய் அறியாமையில் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? அவரின் பின்னல் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விஜய் பேசுகிறார். எந்த இயக்கமும் கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வந்துவிட முடியாது.
ஒரு மரம் எடுத்த உடனேயே பழம் தந்துவிடாது; முதலில் செடியை நட வேண்டும், தண்ணீர் ஊற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். 5 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்தார். ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து முதலமைச்சரானார். யார் புதிய கட்சி தொடங்கினாலும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் கட்சி தொடங்கிய உடனே இமாலய சாதனை செய்தது போல் பேசுகிறார் என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.