திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 99 புதிய வாகனங்களை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா
18 ஸ்கிப் பெட்டிகள் (Skip Bins) மற்றும் 36 சிறப்பு குப்பைத் தொட்டிகள் ஆகியவற்றை மேயர் ஆர்.பிரியா இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
இன்று (22.07.2025) மேயர் ஆர்.பிரியா , பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 9 முதல் 15 வரை உர்பேசர் சுமீத் மூலம் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 99 புதிய வாகனங்களையும், 18 ஸ்கிப் பெட்டிகள் (Skip Bins) மற்றும் 36 சிறப்பு குப்பைத் தொட்டிகளையும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள உர்பேசர் டெப்போவில் கொடியசைத்துப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மக்கள் - தனியார் கூட்டுப் பங்குத்திறன் (PPP) முறைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, திடக்கழிவு உருவாகும் அளவிலும் கணிசமான வளர்ச்சி காணப்படுவதால், தூய்மைப் பணிகள் மேலும் முழுமையடைய வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், மைக்ரோ செயலாக்க மற்றும் செயல்பாட்டுத் (Micro Implementation of Operation Plant-MIOP) திட்டத்தின் கீழ், ரூ.13.18 கோடி மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 82 வாகனங்கள், 3 திடக்கழிவு காம்பாக்டர்கள், 5 ஹூக் லோடர் வாகனங்கள், 2 டன் திறன் கொண்ட 6 டிப்பர் லாரிகள், கடற்கரை சுத்தம் செய்யும் 1 டிராக்டர், 12 மற்றும் 9 கிலோ லிட்டர் திறன் கொண்ட 2 தண்ணீர் டேங்கர் லாரிகள் என 99 புதிய வாகனங்களையும், 20 கனமீட்டர் அளவுள்ள 18 ஸ்கிப் பெட்டிகள் (Skip Bins) மற்றும் 36 சிறப்பு குப்பைத் தொட்டிகளையும் மேயர் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த புதிய வாகனங்களுக்காக 145 ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர்.
இந்த கூடுதல் வாகனங்களும், புதிய பணியாளர்களும் சேர்க்கப்படுவதால், மண்டலங்கள் 9 முதல் 15 வரை உள்ள பகுதிகளில் திடக்கழிவு சேகரிப்பு, பராமரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகள் மிகச் சிறப்பாக விரைவாகவும், திறம்படவும் நடைபெறும். மேலும், சென்னை மாநகரின் தோற்றத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள சிறப்பு குப்பைத்தொட்டிகள் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரதான சாலைகளில் வைக்கப்பட்டு குப்பை சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, மேயர் பெருங்குடி மண்டலம், வார்டு-181, கொட்டிவாக்கத்தில் உள்ள ஏ.ஜி.எஸ். சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினைப் பார்வையிட்டு பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களுக்கான தீர்வுகளை வழங்கினார். மேலும், அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சிகளில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப. ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், நிலைக்குழுத் தலைவர்கள் டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), த.விசுவநாதன் (கல்வி), மண்டலக்குழுத் தலைவர்கள் வி.இ.மதியழகன் (சோழிங்கநல்லூர்), எஸ்.வி.ரவிச்சந்திரன் (பெருங்குடி), உர்பேசர் தலைமைச் செயல் அலுவலர் முகமது சையத் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் க.சங்கர், .க விமலா கர்ணா, க. ஏகாம்பரம், அ. முருகேசன், .ச. மேனகா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.