சூரிய சக்தியை உள்ளடக்கிய மின்சார கொள்முதல் அளவில் மாற்றம்: ஒழுங்கு முறை ஆணையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றும் நடவடிக்கையாக மின்வாரியம் தரப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அனல் மின்நிலையம், எரிவாயு போன்ற பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சூரிய மின்சக்தி, காற்றாலை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு குறிப்பிட அளவில் இருக்க வேண்டும்.
இவற்றை ஆர்.பி.ஓ என அழைப்பர். இந்த ஆர்.பி.ஓ எவ்வளவு அளவு இருக்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் நிர்ணயிக்கப்படும். அந்தவகையில் இந்த நிதியாண்டிற்கான காற்றாலை மின்சார ஆர்.பி.ஓ அளவு 3.36 சதவீதமும், நீர் மின்சாரத்திற்கு 1.48 சதவீதமும், சூரிய சக்திமின்சாரம் உள்ளிட்ட பிற வகை மின்சாரத்திற்கு 28.17 சதவீதம் என மொத்தம் 33.1 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டன.
தற்போது இதில் புதிய திருத்தத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் செய்துள்ளது. அதன்படி, காற்றாலைக்கு 1.45 சதவீதம், நீர் மின்சாரத்திற்கு 1.22 சதவீதம், சோலார் 2.10 சதவீதம், அதிக திறன் கொண்ட சூரிய மின்சாரம் உள்ளிட்ட பிற வகை மின்சாரத்திற்கு 28.35 சதவீதம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.