மருத்துவர்களை பாதுகாக்க தவறினால் சமூகம் மன்னிக்காது: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு ஒன்றிய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய நிதியினை வழங்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ”கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு சொல்லவில்லை என்றாலும் கூட ஏராளமான மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வேலைகளில் இறங்கி இருந்தார்கள்.
அதை நாம் என்றுமே மறக்கவே கூடாது. உரிய நிவாரணம் கேட்டு தனிநபர்களாக சில மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். நாங்கள் இதை ஒட்டுமொத்தமாக மருத்துவ சேவைக்கான பொது பிரச்னையாக தான் பார்க்க போகிறோம். எனவே இதுதொடர்பான விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என கூறிய நீதிபதிகள்,” மருத்துவர்களை நாம் பாதுகாக்கவில்லை என்றால், இந்த சமூகம் ஒருபோதும் நம்மை மன்னிக்காது என்று கருத்து தெரிவித்தனர்.