சுத்தமல்லி அருகே தனியார் தோட்டத்தில் குப்பையில் பற்றிய தீயால் புகைமூட்டம், மூச்சுத்திணறல்
*பொதுமக்கள் கடும் அவதி
பேட்டை : நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லி அருகே தனியார் தோட்டத்தில் இருந்த காகித கழிவுகள், குப்பைகளில் திடீரென பற்றிய தீயால் புகைமூட்டம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக மேற்கொண்டனர்.
நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரம் நல்லாண்டான் குளத்தின் கரையருகே பேட்டை ஐடிஐ அண்ணா நகரை சேர்ந்த முத்து மாரியப்பன் (48) என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.
இங்கு கேரளா மற்றும் பிற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் பழைய குப்பைகளை அழிப்பதற்கு டன் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து அதனை தீயிட்டு கொளுத்தி அளிப்பது வழக்கம் எனக்கூறப்படுகிறது. இதில் பழைய அட்டை பெட்டிகளில் உள்ள இரும்பு பின்கள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்,அலுமினிய கழிவுகள் என மூட்டை மூட்டையாக டன் கணக்கில் இரவு நேரங்களில் சரக்குகள் வந்திறங்கும்.
அந்தவகையில் சுமார் 50 டன்னுக்கும் மேலான காகித ஆலைகளின் கழிவுகள், குப்பைகள் மற்றும் கேரள கழிவுகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் தேவையான கழிவுகள் தரம் பிரிக்கப்படுவதோடு மீதமுள்ள குப்பைகள், கழிவுகள் அவ்வப்போது இரவு நேரத்தில் தீயிட்டு எரித்து அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்நிலையில் அந்த கழிவுகள், குப்பைகள் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரியத் துவங்கின. அப்போது வீசிய பலத்த காற்றின் வேகத்தால் கட்டுப்படுத்த முடியாத தீ மேலும் மளமளவென சுமார் 100 அடி உயரம் வரை கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் மற்றும் மூச்சுத்திணறால் கடும் அவதிக்கு உள்ளான அப்பகுதி மக்கள், இதுகுறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்துவந்த வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்டுங்கடங்காது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயிலிருந்து வெளியாகும் கரும்புகையானது போர் நடக்கும் இடங்களில் குண்டு மழை வீசி அதிலிருந்து வெளியாகும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.
இதன் காரணமாக திருப்பணிகரிசல்குளம், சுத்தமல்லி, பாரதியார் நகர், பேட்டை பல்வேறு பகுதிகளில் காற்று மண்டலத்துடன் கலந்து அதிலிருந்து எழும் துர்நாற்றத்தால் சுற்று வட்டார மக்களும் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாயினர். இதனிடையே விண்ணை மட்டும் அளவிற்கு கிளம்பிய புகை மூட்டத்தை ஏராளமானார் ஆச்சரியத்துடன் வியந்து வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
சுத்தமல்லி பகுதியில் ஏற்கனவே கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு அவை அழிக்கும் சம்பவம் தொடர்பாக இரு மாநில அளவில் பெரும் பிரச்சனை கிளம்பி நீதிமன்ற உத்தரவுப்படி அவை இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் கேரள மருத்துவ கழிவு குப்பை உள்ளிட்ட குப்பைகளை கொட்டி வைத்து அதை அழிக்கும் பணியில் ஈடுபட்ட சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகர், மாயாண்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
அதன் சுவடு மறைவதற்க்குள் அதே போன்ற சம்பவம் தற்சமயம் அரங்கேறியுள்ளது புரியாத புதிராக உள்ளதோடு பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சுத்தமல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.