ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை
சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில், இந்திய அளவில் 60 மையங்களில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடைபெற்றது. நாடு முழுவதும் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 275 பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக 1800 மாணவர்கள் கொண்ட குழுவினர் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இதில், மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் 200 மாணவர்கள் 20 குழுக்களாக கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் கல்லூரி தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு மாணவர்களின் ஆராய்ச்சி குறித்து நேரில் கேட்டறிந்து ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு உற்பத்தி மட்டுமல்லது ஆராய்ச்சி துறையில் மிகப்பெரிய ஒரு அடியை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் 1800 அணிகள் கலந்து கொண்டு நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் போட்டிகளில் தமிழ்நாடு கல்லூரிகளில் அணிகள் 22 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியா முழுக்க நடக்கும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்வாகி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று நாம் எல்லோரும் மார்தட்டி சொல்லிக் கொண்டிருக்கிறோமே அதன் விளைவு தான். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று நாம் சொல்வதுதான் அதிகப்படியான வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த ஹேக்கத்தான் மூலம் படிப்பில் இருந்து அடுத்த கட்டமாக செயல் திட்டமாக செயல் வடிவமாக ஆராய்ச்சிக்கு போகிறவர்கள் புதிய அடியை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற ஹேக்கத்தான்களை நாம் தமிழ்நாட்டிலும் செய்து கொண்டிருக்கிறோம் தொடர்ந்து இந்திய அளவில் நமது மாணவர்கள் வெற்றி பெறுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.