பாஜகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில் சின்னத்திரையில் கல்லா கட்டும் ஸ்மிருதி இரானி: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் பரபரப்பு
மும்பை: நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வந்துள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகை தான்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சித் தொடர் நடிகையாக இருந்தார். ‘கியூங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற புகழ்பெற்ற தொடரில், துளசி விரானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். கடந்த 2000 முதல் 2008 வரை ஒளிபரப்பான இத்தொடர், இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்றது.
சிறந்த மருமகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடருக்காக, ஸ்மிருதி இரானி தொடர்ந்து ஐந்து முறை சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றார். பாஜகவில் சேர்ந்து அமேதி தொகுதி எம்பியாகி அமைச்சரான அவர், கடந்த 2024 தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். அதனால் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அதே தொலைக்காட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக சின்னத்திரைக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், அவரது சம்பளம் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
ஒரு அத்தியாயத்தில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானி ரூபாய் 14 லட்சம் சம்பளம் பெறுவதாகவும், இதன்மூலம் இந்திய தொலைக்காட்சித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் உருவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவின. தொடர்ந்து பரவி வந்த இந்த தகவல்களுக்கு ஸ்மிருதி இரானி தற்போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்திய தொலைக்காட்சித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நான் தான்’ என்று உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார்.