குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்
* டைனிங் டேபிளில் சாப்பிட்ட பிறகு சிறிது வினிகரும், ஃபாரபின் எண்ணெயும் கலந்து டேபிளை துடைத்தால் பளபளக்கும். நாற்றம் இருக்காது.
* வெள்ளைத் துணியில் எம்பிராய்டரி செய்யும் போது அழுக்காகாமல் இருக்க, கைகளில் டால்கம் பவுடரை பூசிக்கொள்ளவும்.
* தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து கேஸ் ஸ்டவ், சமையல் மேடையை துடைத்தால் பளிச் சென்று இருக்கும்.
* ஹேண்ட் பேக், ஷூ, பர்ஸ் போன்ற தோல் பொருட்களில் காளான் படிந்திருந்தால் வெள்ளை வாசலினைத் தடவி அழுத்தித் துடைத்தால் சுத்தமாகும்.
* கிச்சனில் புகை அதிகமாக இருந்தால், நடுவே ஒரு ஈரத் துணியை கட்டித் தொங்க விட்டால், புகை காணாமல் போகும்.
* வீட்டில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் போது, அதனுடன் இரண்டு துளி கறுப்பு பெயிண்ட் கலந்து அடித்தால் வெண்மை அதிகமாக பளிச்சிடும்.
* வெது வெதுப்பான நீரில் சிறிது சோடா உப்பைக் கலந்து ஃபிரிட்ஜின் உள் அறைகளை கழுவினால் கறைகள் நீங்கும்.
* காரில் நிக்கல் உள்ள இடங்கள் துருப்பிடிக்கும். அந்த துருவை நீக்க சிகரெட் பாக்கெட்டில் உள்ள ஜரிகைத் தாளைக் கொண்டு தேய்த்தால் துரு போகும்.
* சட்டையில் பட்டன் தைக்கும்போது நெய்ல் பாலிஷால் பட்டன் நடுவில் போட்டு வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். தையல் பிரிந்து, பட்டன் கழன்று விடாமல் இருக்கும்.
* ஹோட்டல் போல வீட்டிலும் பேப்பர் ரோஸ்ட் செய்ய ஆசையா? சிறிது பழைய சாதத்தை அரைத்து அதை தோசை மாவுடன் கலந்து வார்த்துப் பாருங்கள்.
* அப்பளத்தை சிறிது வெயிலில் உலர்த்திய பிறகு பொரித்தால் அப்பளம் எண்ணெய் குடிக்காமல், ஒட்டாமல் சுவையாக இருக்கும்.
* கிச்சனில் எறும்புத் தொல்லையா? படிகாரத்தை தூள் செய்து எறும்பு வரும் பாதையில் தூவினால் எறும்பு ஓடியே போகும்.
* இடியாப்ப மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்தால் இடியாப்பம் ரொம்ப மென்மையாக இருக்கும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசியுடன் இரண்டு ஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் கலந்தால் பாயசம் மணமாகவும், கெட்டியாகவும் இருக்கும்.
* வெண்டைக்காயின் வழுவழுப்பு சிலருக்கு பிடிக்காது. அதனாலென்ன! சமைப்பதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி அரைமணி நேரம் வெயிலில் காய வைத்தால் போதும். வழுவழுப்பு காணாமல் போகும்.
- அ. யாழினி பர்வதம்