குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* உளுந்தங் கஞ்சி செய்யும்போது சுக்கை பொடித்து சேர்த்தால் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.
* தீப்பெட்டி ஈரமாகி கொளுத்தவில்லை யெனில் அரிசி மாவைத் தேய்த்து விட்டு கொளுத்தினால் ‘டக்’கென பிடித்து எரியும்.
* இட்லி தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும்போது சிறிது புளியை வறுத்து அரைத்து கலந்து வைத்தால் அதன் ருசியே தனி.
* பீங்கான், வாஷ்பேசின், குளியல் தொட்டிகளில் மஞ்சள்கறை படிவது சகஜம். உப்பும், டர்பன்டைன் ஆயிலும் கலந்து தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.
* பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். அதில் பத்து சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் உறையாது.
* நைலான் கயிறை வாங்கியவுடன் சிறிது சோப்பு நீரில் நனைத்து பின் பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.
* வெங்காயப் பச்சடி செய்யும்போது புதினா இலைகளை நறுக்கிச் சேர்த்தால் பச்சடி சுவையாக இருக்கும்.
* புளிசாதம் செய்யும்போது சிறிது எள் வறுத்துப் பொடிசெய்து சாதத்தில் கலந்தால் சாதம் சுவையாக இருக்கும்.
* பாலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவைத்துக் குடித்தால் நெஞ்சுச் சளி வெளியேறி விடும்.
* கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
* பால் சுரப்பு நிற்க தேங்காய்ப் பூவை வதக்கி மார்பில் கட்டினால் பால் சுரப்பு நின்று விடும்.
* துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி போன்றவற்றை வெங்காயத்தை வெட்டி தேய்த்தால் துரு போய்விடும்.
* வாழை இலையை கோணிப்பையில் சுற்றி வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல், வதங்காமல் அப்படியே இருக்கும்.
- விமலா சடையப்பன், காளைம்பட்டி.