18-35வயதுடையவர்கள் பாதிப்பு; மூளையை பாதிக்கும் தூக்கமின்மை: மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* மொபைல், லேப்டாப் பயன்பாட்டை குறைக்க வேண்டும்
* தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லதல்ல
சென்னை: இன்றைய வேகமான உலகில், தூக்கம் என்பது பலருக்கு ஒரு ஆடம்பரமாகவே மாறிவருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, மன அழுத்தம், மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இரவு நேரத்தில் தூங்குவதை பாதிக்கின்றன. தமிழ்நாட்டில், குறிப்பாக நகர்ப்புறங்களில், முறையாக தூங்காமையும், தாமதமாக தூங்குவதும் அதிகரித்து வருகிறது. உலகளவில், தூக்கமின்மை (Insomnia) ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரங்களின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 10-30 சதவீத பேர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில், இந்த பிரச்சினை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களிடையே அதிகரித்து வருகிறது. 2023ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவ ஆய்வில் 18-35 வயதுடையவர்களில் 35% பேர் இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதாக தெரிவிக்கிறது.
மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய ஆய்வு படி, இந்தியாவில் 25 சதவீத நகர்ப்புற மக்கள் தாமதமாக தூங்குவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரை போன்ற நகரங்களில் இரவு 11 மணிக்கு மேல் தூங்குவோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக மொபைல் போன் பயன்பாடு, வேலை அழுத்தம், மற்றும் இரவு நேர வேலை முறைகள் (Night Shifts) மருத்துவர்கள் குறிப்பிடப்படுகின்றன. முறையாக தூங்காமை மற்றும் தாமதமாக தூங்குவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதய நோய்கள், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, தூக்கமின்மை கவனக்குறைவு, மறதி, மற்றும் முடிவெடுக்கும் திறனைக் குறைக்கிறது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் காந்த் கூறியதாவது: இரவில் தாமதமாக தூங்குவதால் இதய, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். இதனைத் தவிர மூளை அதிக அளவில் பாதிக்கப்படும். தூங்கும் போது மூளை முழுமையாக ஓய்வெடுப்பதில்லை அப்பொழுதும் அது சில பணிகளை மேற்கொள்ளும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி தூங்கும் போது உருவாகும். மேலும் பகலில் நடக்கும் அனைத்தையும் இரவு நேரத்தில் ஒன்றிணைத்து சேமித்துக்கொள்ள பணி மூளையில் நடைபெறும். எனவே முறையாக தூங்க வில்லை அல்லது தாமதமாக தூங்கினால் தூங்கும் போது வழக்கமாக மேற்கொள்ளும் செயல்பாடுகள் பாதிப்படையும். குழந்தைகள் முறையாக தூங்கவில்லை என்றால் உடல் வளர்ச்சி சரியாக இருக்காது, ஞாபக சக்தி பிரச்சனை ஏற்படும், கவனிக்கு திறன் குறைந்துவிடும். உடலில் கார்பசல் ஹார்மோன் உள்ளது.
இது உடலில் சர்க்கரை அளவை உருவாக்க உதவி செய்யும். எப்பொழுதெல்லாம் மன அழுத்தத்தால் தூங்காமல் இருக்கிறோமோ அப்போது கார்பசல் ஹார்மோன் அதிகம் சுரக்கும், அதனால் உடலில் சக்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும். இரவு பணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று எனவே பணி சேர்ந்து முதல் சில ஆண்டுகளில் மேற்கொள்ளலாம். அதற்குப் பிறகு தொடர்ந்து மேற்கொள்வது ஆபத்தை விளைவிக்கும். இரவு பணிக்கு செல்லும் நபர்கள் பகலில் கண்டிப்பாக தூங்க வேண்டும். நீண்ட நேரம் விழித்து வேண்டும் என காஃபின் (கஃபீன்) கலந்த பானங்கள் மற்றும் டீ காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. தூங்கும் நேரம் தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தினமும் தூங்கும் நேரத்தை மாற்றுவதால் பிரச்சனை ஏற்படும். சிலர் மதிய உணவுக்குப் பிறகு தூங்க சென்று விடுகின்றனர். அது இரவில் தூங்குவதை தாமதம் ஆக்கும்.
எனவே மதிய நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூக்க மாத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. அது எடுத்துக் கொள்வது நல்லதல்ல. ஒரு வாரம் எடுத்துக் கொள்ளலாம் தொடர்ந்து தூக்கம் வராமல், தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வது உடலில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும். தூக்கம் வராதது ஒரு தனி வியாதி இல்லை. உடலில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்தால் தான் இது போன்று ஏற்படும். எனவே தொடர்ந்து தூக்கம் வராமல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
18-35 வயதுடையவர்களில் 35 சதவீத பேர் இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதாக தெரிவிக்கிறது.
நல்ல தூக்கத்திற்கு பொதுவான வழிகள்
தூக்க ஒழுக்கம் அதாவது ஒரே நேரத்தில் தூங்குவது மற்றும் எழுவது, இருட்டான, குளிர்ச்சியான படுக்கையறை, தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் மொபைல், லேப்டாப் பயன்பாட்டை நிறுத்த வேண்டும், இரவு உணவை தூங்குவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன் முடிக்க வேண்டும், பால், வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது, காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்ற தூக்கத்தைக் கெடுக்கும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
தாமதமாக தூங்க பொதுவான காரணங்கள்
நீல ஒளி (Blue Light) வெளியிடும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், மற்றும் டிவிகள் மெலடோனின் (Melatonin) என்ற தூக்க ஹார்மோன் சுரப்பை 50 சதவீத வரை குறைக்கின்றன. இதனால், இரவு 11 மணிக்கு மேல் தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவோர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் வேலை நேரம் மற்றும் இரவு நேர ஷிப்டுகள் தூக்க சுழற்சியை (Circadian Rhythm) பாதிக்கின்றன. தமிழ்நாட்டில், ஐடி துறையில் பணிபுரிவோரில் 60 சதவீத பேர் இரவு நேர வேலை காரணமாக தூக்கமின்மையை அனுபவிக்கின்றனர். இரவு நேரத்தில் காபி, டீ, அல்லது மது அருந்துவது தூக்கத்தை தாமதப்படுத்துகிறது.
கரெக்டா தூங்கலைன்னா...
இதய நோய்கள் குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 45 சதவீதம் அதிகரிக்கும். இன்சுலின் எதிர்ப்பால் டைப்-2 நீரிழிவு நோய் அபாயம் 30 சதவீதம் உயரும். பசி ஹார்மோன் (கிரெலின்) அதிகரித்து உடல் எடை 20 சதவீதம் கூடும். மனநலப் பாதிப்புகள், மன அழுத்தம், பதற்றம், கவனக்குறைவு, மறதி, வாழ்நாள் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.