அடிமை சிக்கிவிட்டதாக மலராத கட்சி மகிழ்வதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மீனவ கிராமத்தில் என்ன பஞ்சாயத்தாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் நல்ல வார்டு எனும் மீனவ கிராமத்தில் கோயில் விவகாரத்தில் இருதரப்பு உரசால் அடிக்கடி பஞ்சாயத்து ஏற்பட்டதாம். அசாதாரண சூழலால் மக்கள் அச்சமடையவே சமாதான கூட்டத்தை அதிரடியாக கூட்டினாராம் பிரதிநிதியான சபையின் நடுவர். உயர்மட்ட காக்கிகள் அங்கு வந்து அமர ஒருவழியாக சுமுக வழி கிடைத்ததாம். 12 நபர் கொண்ட புதிய நிர்வாக குழு ஏற்படுத்தப்படவே பஞ்சாயத்துகள் சைலண்ட் மோடுக்கு திரும்பி உள்ளதாம். இதுபற்றிதான் கடலோர பகுதியிலும், உள்ளூர் காக்கிகளிடத்திலும் பரவலாக பேச்சாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கரூர் துயரத்தை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்களே..’’ என்று வேதனையுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கரூரில் 41 உயிர்களை நொடிப்பொழுதில் காவு வாங்க காரணமான நடிகர், எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக தப்பி ஓடிய விவகாரத்தை உலகமே பார்த்தது. இதில் எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் நடிகர் ரொம்பவே கூலாக இருந்ததாக அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க. கண்ணை மூடிக்கொண்டு சினிமா காதலியுடன் மிதப்பது, வில்லனுடன் பைட் செய்வது போன்றது தான் அரசியலுன்னு நினைச்சிக்கிட்டிருந்தாராம். ஆனால் பொதுமக்களை எப்படி பாதுகாப்பது என்பது நிஜத்தில் அவருக்கு தெரியாம போச்சுதாம். இதன் விளைவுதான் அநியாயமாக 41 உயிர்கள் போனது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணை தீவிரமாக போய்கிட்டிருந்தபோது திடீரென சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருக்கு. இந்த உத்தரவால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது இலைக்கட்சி தலைவர் தானாம்.. எப்படியாவது நடிகரை தனது இலைக்கட்சி கூட்டணிக்குள் கொண்டுவந்தே ஆகணுமுன்னு கொடி தூக்கிக்கிட்டே இருந்தாராம்.. நடிகரை குளிர்விக்கும் வகையில் தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டே இருந்தாராம்... இதன்மூலம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற கனவில் இருக்காராம். நடிகர் பாஜவை தொடர்ந்து எதிர்த்துக்கிட்டிருந்த நேரத்தில் சிபிஐ கிட்ட அந்த நடிகர் சிக்கிக்கிட்டதாகவே கட்சிக்காரங்க பேசிகிறாங்க. நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை நடத்தவே முடியாது என்ற நிலை ஏற்படும் என மிரட்டி அடிபணிய வைக்கப்படும் எனவும் இலைக்கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க.. அதே நேரத்தில் தங்களுக்கு அழகாக அடிமை கிடைத்துவிட்டதாக மலராத கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனி உதவியாளர் வச்சு வசூல் பலமா நடக்குதாமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களில், `மதுரை மன்னன்’ பெயர் கொண்ட ஒரு தாசில்தார், சமீபகாலமாக வசூல் குவிப்பதில் ரொம்பவே கில்லியாக செயல்படுகிறாராம். வாரிசு சான்று, சால்வன்சி சான்றிதழ், குத்தகைக்கு விடும் பூமிக்கு சான்றிதழ் வழங்குவது, பட்டா பெயர் மாற்றம் பல வகைகளில் பல லட்சங்களை குவித்து வருகிறாராம். ஒவ்வொரு வாரமும், விடுமுறை நாளான சனிக்கிழமை ஆபீசுக்கு தவறாமல் வந்து விடுகிறாராம். அன்றைய தினம் மாலை 7 மணிக்கு பிறகு, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், கட்டிட பொறியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை நேரடியாக வரவழைத்து, கரன்சி கறந்து விடுகிறாராம். இதற்காக, ஒரு தனி உதவியாளரை நியமித்துள்ளாராம். அவருக்கும் சிறிது பங்கு கொடுப்பதால் அவர், இதுபற்றி வெளியே மூச்சு... விடுவதில்லையாம்.
இந்த பக்கம் கரன்சி... அந்த பக்கம் கையெழுத்து... என்ற கொள்கையோடு இவர் வலம் வருகிறாராம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், எதற்கெடுத்தாலும் பணம்... பணம்... என்று அலைகிறாராம். கரன்சி கொடுக்காத பல்வேறு வகையான கோப்புகளில் கையெழுத்து போடாமல், நிலுவையில் வைத்து விடுகிறாராம். இவர், ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் எல்லாம் கரன்சி இல்லாமல் எந்த கோப்புகளையும் நகர்த்த மாட்டாராம். அதையே தற்போது இங்கேயும் செய்து வருகிறாராம். இவரது ஆட்டம் அதிகமாகி செல்வதால், ஒரு உயரதிகாரி பலமுறை எச்சரித்துள்ளாராம். ஆனாலும் இவர், அதுபற்றி கண்டுகொள்ளவே இல்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பாஜவுக்கு துண்டு போர்த்தி பரபரப்பை ஏற்படுத்தினாராமே மாஜி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்காநகரில் நடந்த மலராத கட்சி தலைவரின் பிரசார பயண துவக்கவிழா மீண்டும் தாமரை மற்றும் இலைக்கட்சியினரிடையே கசப்பை ஏற்படுத்தி விட்டதாம். ஏற்கனவே சேலத்துகாரர் தூங்காநகரில் தனது பிரசாரத்தை மேற்கொண்டபோது, இவரது வாகனத்தில் ஏற முயன்ற மலராத கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் இறக்கி விடப்பட்டார். இதனால், இரு கட்சியினரும் தூங்காநகரில் அவ்வளவாக ஒட்டிக் கொள்வதில்லை. நேற்று முன்தினம் மலராத கட்சியின் மாநிலத் தலைவர் தனது பிரசார பயணத்தை தூங்காநகரில் துவக்கினார். இதை கூட்டணி கட்சி சார்பில் சேலத்துக்காரர் தான் துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர் வராமல் உள்ளூர் மாஜிக்களை மட்டும் ஒப்புக்கு அனுப்பி வைத்ததில் மலராத கட்சி தரப்பினருக்கு ரொம்பவே வருத்தமாம். வாழ்த்த சென்றவர்களில் செல்லூர்காரர், செல்லமானவர் ஆகியோர் மலராத கட்சி தலைவரை கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்துள்ளனர். ஆனால், மாஜி உதயமானவரோ ஒரு படி மேலே போய் பாஜ கரை போட்ட துண்டை போர்த்தி, மலராத நிர்வாகிகள் மனதில் ‘துண்டை போட்டு விட்டாராம்’. இலைத்தரப்பை சேர்ந்தவரான உதயமானவர், எப்படி பாஜ துண்டை அணிவிக்கலாம், சால்வை தானே போட வேண்டுமென தூங்கா நகர இலைக்கட்சிக்குள் ஒரே புகைச்சலாம்...’’ என்றார் விக்கியானந்தா.