கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி; அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை: கல்குவாரி விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தில், அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள கல்குவாரியில், கடந்த மே 20ம் தேதி பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணியின் போது, பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கிய தொழிலாளர்களில் 6 பேர் இறந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. 2019ம் ஆண்டின் அரசாணைப்படி, சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழுவை அமைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுபோல் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சிவகங்கை மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். மல்லாக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார், சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர், எஸ்.எஸ்.கோட்டை போலீசார் உள்ளிட்ேடார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், குவாரி விதிமீறலில் தொடர்புடைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.