சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உள்ளே சிக்கியவர்கள்களின் கதி என்ன?
விருதுநகர்: சிவகாசி அருகே கன்னிசேரி புதூர் சாலையில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த பட்டாசு ஆலையில் தீவிரமாக பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டபோது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.