சிவகிரியில் ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி துவக்கம்
*அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்
மொடக்குறிச்சி : ஈரோடு அடுத்த சிவகிரியில் ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான விளையாட்டுத்துறை, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் ஊக்கத்தொகை வழங்குதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், மாநிலம் முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள், பல்நோக்கு விளையாட்டரங்கம்,விளையாட்டு விடுதி கட்டிடங்கள் என பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஈரோடு அடுத்த சிவகிரியில் ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். தொடர்ந்து, அந்நிகழ்வில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்திற்கான அனைத்து தேவைகளையும் உடனடியாக செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக, இளைஞர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இளைஞர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் விளையாட்டரங்கங்கள் அமைப்பது, உபகரணங்கள் வழங்குதல்,பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.
அனைவரும் ஏதேனும் விளையாட்டில் கலந்து கொள்வதன் மூலம் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதுடன் மனமும் வலுவடைகிறது. அந்த வகையில் இளைஞர்கள் மட்டுமில்லாமல் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவ, மாணவிகள் என அனைவரும் விளையாட்டில் தங்கள் திறமையை காண்பிக்க ஏதுவாக முதலமைச்சரின் விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடியில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, துணை முதலமைச்சர் 5.5.2025 அன்று, சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், SDAT அலுவலகம் அருகில், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளை துவக்கி வைத்ததார்.
அந்த வகையில், சிவகிரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3 கோடியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அமையவுள்ள இந்த முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கில் தடகளம்,கால்பந்து, கூடைப்பந்து,கையுந்து பந்து, கபடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான வசதிகள் உள்ளது.
இதன் மூலம் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் மேலும் சிறந்து விளங்குவதற்கு வாய்ப்பாக அமையும். விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி, ஈரோடு எம்.பி பிரகாஷ், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி,சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.