சிவகங்கை சமத்துவபுரம் சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சிவகங்கை: சிவகங்கை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமத்துவபுரம் வழியாக செய்லும் சாலை சுமார் 1.5 கி.மீ. தூரம் சென்று அல்லூர் பனங்காடி சாலையில் இணைகிறது. சிவகங்கை நகர் விரிவாக்க பகுதியான அல்லூர் பனங்காடி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது.
தற்போது சாலை மிகவும் சேதமடைந்து பல்வேறு இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கற்கள் பெயர்ந்து வாகன டயர்களை பதம் பார்க்கிறது. சாலையின் இருபுறமும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வரும்போது டூவீலர், ஆட்டோக்கள் சாலையோரத்தில் வாகனங்களை ஒதுக்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சமத்துவபுரம் மற்றும் சிவகங்கையின் விரிவாக்க பகுதிகளுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையில் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.
புறவழி சாலை அமைக்கும்போது கனரக வாகனங்கள் இந்த வழியாக சென்றதால் சாலை முற்றிலும் சேதமடைந்துவிட்டது. எனவே, உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.