கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உயர்மட்டபால பணி சைட் அலுவலகம் தீப்பற்றியது
கூடுவாஞ்சேரி: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே புதிதாக கட்டப்படவிருக்கும் உயர்மட்ட பால கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சைட் அலுவலகம் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த அலுவலகத்தில் பரவிய தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை வண்டலூர் அருகே ஊரப்பாக்கம், ஜிஎஸ்டி சாலையோரத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு மாநகர, அரசு விரைவு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கு புதிதாக உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் உயர்மட்ட பாலப் பணிக்கான சைட் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய உயர்மட்ட பாலப் பணி சைட் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென கரும்புகையுடன் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு படையினர், சைட் அலுவலகத்தில் பரவியிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதில் சைட் அலுவலகத்தில் இருந்த ஏசி மற்றும் கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைட் அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலை காரணமா என சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.