ரூ.6 லட்சத்தை பிரிப்பதில் தகராறு; தங்கையை கொன்று மூட்டையில் கட்டி வீசிய அண்ணன்: ‘கோதுமை’ மூட்டை என போலீசை ஏமாற்றியதால் பரபரப்பு
கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் சொத்து தகராறில் தங்கையை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய அண்ணன் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ராம் ஆசிஷ் நிஷாத் (32). இவருக்கும், இவரது தங்கை நீலம் (19) என்பவருக்கும் இடையே, நிலம் கையகப்படுத்தியதில் அரசு வழங்கிய ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த திங்கட்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம் ஆசிஷ், துணியால் நீலத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை சாக்கு மூட்டையில் திணிப்பதற்காக கை, கால்களை உடைத்து, மூட்டையாக கட்டி தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் உடலை வீசுவதற்காக சென்றபோது, வழியில் காவல்துறையினரின் சோதனைக்கு ஆளாகியுள்ளார். அப்போது அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, ‘சாக்கு மூட்டையில் இருப்பது கோதுமை’ என்று கூறி தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையே, நீலத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் சத் பூஜைக்காக சென்றிருக்கலாம் என்று கருதி தேடி வந்துள்ளனர். இருப்பினும், ராம் ஆசிஷ் பெரிய சாக்கு மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவர் தனது தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்றிரவு கரும்புத் தோட்டத்தில் இருந்து அழுகிய நிலையில் நீலத்தின் உடலை காவல்துறையினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, ராம் ஆசிஷ் நிஷாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
