சிறுமுகை வனச்சாலையோரம் 1 டன் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில், குப்பைகள் சேகரிப்பு
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி அமைந்துள்ளது. இந்த வனச்சரக பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
சமீப காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி விட்டு வனச்சாலையோரம் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் வனவிலங்குகளுக்கு எமனாக மாறி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினரும் அவ்வப்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு பல்வேறு வகையில் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று சிறுமுகை - சத்தி செல்லும் சாலையில் அம்மன் புதூர் முதல் பால்காரன் சாலை வரை வனச்சரகர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர், சிறுமுகை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அடங்கிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வனச்சாலையோரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியின் போது சுமார் 1 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. முன்னதாக சிறுமுகை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் மனோஜ் கல்லூரி மாணவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.