சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு: 10க்கும் மேற்பட்டோர் காயம்
சீர்காழி: சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழந்தனர். சாலையை கடக்க முயன்ற நபர் மீது பேருந்து மோதியது. மதில் சுவரின் மறுபுறம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது பேருந்து மோதி உயிரிழந்தனர். பேருந்து மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளர் சரண்யா, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தலைமறைவான பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பேருந்து அதிவேகமாக வந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடைவீதி அருகே சங்கர் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது அவர் மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த வீட்டின் பக்கவாட்டு சுவரை இடித்து கொண்டு நின்றது. அந்த பக்கவாட்டு சுவர் பக்கம் வேலை செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் சரண்யா என்பவர் மீதும் பேருந்து மோதியது இதில் சரண்யா பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரே நேரத்தில் இருவர் உயிரிழந்திருக்கும் சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.